வாஷிங்டனில், சமூக ஊடக துறைப் பிரமாண்டம் மெட்டாவைச் சுற்றி உருவான பெரும் சர்ச்சை மீண்டும் முன்வந்துள்ளது. ‘பேஸ்புக்’ பயனர்களின் தகவல்கள் 2016-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திடம் கசிய்ந்த விவகாரம் தொடர்பாக, மெட்டாவின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க்கு எதிராக முதலீட்டாளர்கள் ரூ.66,000 கோடி இழப்பீட்டை கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் சார்பாக வேலை பார்த்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், கோடிக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பரிசோதனை இல்லாமல் பயன்படுத்தியது. இதனால், அமெரிக்க சட்டப்படி தனியுரிமை மீறல் ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்க, 2018ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மார்க், ரூ.35,000 கோடி அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த விவகாரம் காரணமாக, பேஸ்புக் பங்குகள் ரூ.1.36 லட்சம் கோடி மதிப்பில் சரிவை சந்தித்தன. இதனால் பெரும் நஷ்டம் அடைந்த முதலீட்டாளர்கள், “பயனர்களின் தரவுகள் தவறாக பயன்படும் அபாயம் குறித்து எங்களை மெட்டா எச்சரிக்கவில்லை. நாங்கள் தவறான தகவல்களால் பாதிக்கப்பட்டோம். எனவே இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில், மெட்டா பதிலளிக்கையில், “பயனர்களின் பாதுகாப்புக்காக பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம். கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் செயல்பாடுகள் நம்மை ஏமாற்றியது. வழக்கில் காணப்படும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை” என தெரிவித்துள்ளது. இது, சமூக ஊடக நம்பகத்தன்மை மற்றும் தனியுரிமை உரிமை மீதான சர்வதேச கவனத்தை மீண்டும் தூண்டி விட்டது.