புது டெல்லி: வரவிருக்கும் 2036 ஒலிம்பிக்கிற்கு இந்தியா தயாராகி வருகிறது, இதற்காக விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 உதவி வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
21-வது உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு -2025-ல் பங்கேற்கும் இந்திய அணிக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “இந்தியா ஏற்கனவே 2036 ஒலிம்பிக்கிற்கு தயாராகி வருகிறது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இயல்பானது. வெற்றிக்கான இலக்குகளை நிர்ணயிப்பதும், வெற்றிக்கான திட்டமிடலும் அனைவரின் இயல்பிலும் இருக்க வேண்டும்.

வெற்றி என்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். வெற்றி பெறும் பழக்கத்தை வளர்த்துக் கொள்பவர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படுவார்கள். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2036 ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை ஏற்கனவே தயார்படுத்தி வருகிறோம். சுமார் 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதத்திற்கு ரூ.50,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக விரிவான மற்றும் முறையான திட்டம் வகுக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.