திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா உயர் நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்ப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என உறுதியான உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான அவசியத்தில் அதைப் பயன்படுத்துவது வழக்குகள் மற்றும் தீர்ப்புகளில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என நீதிமன்றம் கண்டித்துள்ளது.

சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ. அடிப்படையிலான மொழிபெயர்ப்பு செயலிகளை நீதிமன்ற உத்தரவு மொழிபெயர்ப்பில் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் வழிகாட்டுதல்களுக்கு முரணாக அமையும்போது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை தவறாக மொழிபெயர்ப்பது, நீதியின் சீரழிவிற்கு வழிவகுக்கும் என்பதால், மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி இல்லாமல் அதன் பயன்பாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், நீதித்துறையில் ஏ.ஐ. பயன்பாடு குறித்து உயர்நீதிமன்றம் அங்கீகரித்த செயலிகளே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்கள், தீர்ப்புகள் உள்ளிட்ட எந்தவொரு சட்ட ரீதியான தகவலுக்கும் ஏ.ஐ. மூலமாக விருப்பப்படி மொழிபெயர்ப்பு செய்யும் செயல்முறை தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவு, நீதித்துறையில் ஏ.ஐ. பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட முதல் முறையான கட்டுப்பாடாகும். ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாட்டில் சீர்மை மற்றும் துல்லியம் அவசியமானவற்றாகும் என்பதால், நீதித்துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.