இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 13,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு, தினசரி இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட பயணிகளை கொண்டு செல்கின்றது. இந்நிலையில், பயணிகளை கவனத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் சில புதிய மாற்றங்களை கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறது.

சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிறகு, மேலும் சில முக்கியமான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ரயிலில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சுமார் 75 ஆயிரம் ரயில் பெட்டிகளிலும் 15 ஆயிரம் ரயில் இன்ஜின்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களில், 100 கி.மீ. வேகத்திலும் தெளிவான காட்சிகளை பதிவு செய்யும் திறன் மற்றும் மைக்ரோஃபோன் வசதியும் கொண்டிருக்கும்.
மேலும், ‘அன் ரிசர்வ்’ எனப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் காணப்படும் அதிகமான கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் அடிப்படையில், இவை போன்ற பெட்டிகளில் அதிகபட்சம் 150 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். சோதனை ஓட்டமாக இந்த முறை விரைவில் அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த மாற்றங்கள் பயண சீரமைப்புக்காக முக்கிய வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளை பாதுகாப்பான மற்றும் சீரான பயணத்துக்கு வழிவகுக்கும் வகையில், இந்த முயற்சிகள் அமல்படுத்தப்படும்.