தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் காசிராஜன் முன்னிலை வகித்தார். மத நல்லிணக்க பிரச்சாரக் குழு மாநில செயலாளர் தென்னை விஞ்ஞானி செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய பொதுச் செயலாளர் சந்திரபோஸ் சிறப்புரையாற்றினார்.
டெல்டா மண்டல தலைவர் சுரேஷ், தமிழ்நாடு புதுச்சேரி மாநில தலைவர் ஆதி.நெடுஞ்செழியன், மாநில துணைத்தலைவர் துரை. கோவிந்தராஜன், மாநில இணை செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் பேசினர்
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மற்றும் வெளிப்புறம் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். கோயிலுக்கு எதிர்ப்புறம் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாலையின் குறுக்கே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், கோயிலை சுற்றி போதிய அளவில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும், கோயிலின் தென்புறம் பந்தல் அமைத்து பக்தர்களை வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட துணைத்தலைவர் சம்பத், இணைச்செயலாளர் மகேஷ், துணை செயலாளர் சக்திவேல் மணிகண்டன் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கண்ணகி, துணைச் செயலாளர்கள் வசந்தா, டெய்சி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ருக்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.