சமூக ஊடகங்களின் பரவலால், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக மொபைல் மூலம் வீடியோக்கள் எடுத்து ரீல்ஸ் வடிவில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் போன்ற இடங்களில் சாகசமாக ரீல்ஸ் எடுப்பது ஒரு பெரிய போக்காக உருவெடுத்துள்ளது. இது பல சமயங்களில் உயிரிழப்புக்கும் காரணமாகிறது.

இதனை தடுக்கும் நோக்கில் ரயில்வே துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய உத்தரவின்படி, ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களின் அருகில் ரீல்ஸ் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நபர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், சில சந்தர்ப்பங்களில் கைது செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்வே போலீசும், பாதுகாப்பு படையினரும் சி.சி.டி.வி. மூலம் இந்த நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். புகைப்படம் எடுப்பது அனுமதிக்கப்பட்டாலும், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அனுமதி இல்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, ஓடும் ரயிலில் தொங்கி அல்லது தண்டவாளத்தில் படுத்து வீடியோ எடுப்பது போன்ற செயல் கடுமையாகக் கண்காணிக்கப்படும்.
பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, இச்சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை மீறுபவர்கள் எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக அமையும். எனவே பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.