திருப்பூரில் ஆன்லைன் டெலிவரி சேவைகளில் ஈடுபட்டுள்ள ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஜெப்டோ உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள், தமிழக அரசின் இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தால் பல நலத்திட்டங்கள் பெற முடியும். இதில் முக்கியமானதாக, புதிதாக இருசக்கர மின் வாகனம் (இ-ஸ்கூட்டர்) வாங்கும் திட்டத்திற்கு ரூ.20,000 மானியம் வழங்கப்படுகிறது. இது 2025-26 ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் அறிவிக்கப்பட்டதைக் கொண்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் இணைய பொருளாதார சூழலில், இந்த துறையில் வேலை செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நலவாரியம் (Gig Workers Welfare Board) உருவாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தற்போது 2,000 இணையம் சார்ந்த சேவை தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க தலா ₹20,000 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், 15 லட்சம் தொழிலாளர்களுக்கான விபத்து மரணம் மற்றும் இயலாமை இழப்பீட்டிற்கான குழு காப்பீட்டுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுபோல் சேவை தொழிலாளர்களுக்கென சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறை மற்றும் ஓய்வுக்கூடங்கள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கான நிதியாக ₹1975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மாநில அரசு உறுதி செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த மானியத்திற்கான விண்ணப்பங்களை tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகேயுள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தை 0421 2477276 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.