இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற உலக நட்சத்திரங்கள் விளையாடும் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் லீக் 2025 தொடரின் 8வது போட்டி ஜூலை 24 அன்று லெய்செஸ்டரில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, ரவி போபாரா, இயன் பெல், மொயின் அலி போன்ற முக்கிய வீரர்கள் தோல்வியுற்றதால் 20 ஓவரில் 152/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. முஸ்டர்ட் 39, மோர்கன் 20, சமித் படேல் 24 என சிலரே சிறந்த பங்கு வகித்தனர்.

பின்னர் 153 ரன்கள் இலக்கைத் தேடிய தென்னாப்பிரிக்கா, ஹாசிம் அம்லா – ஏபி டீ வில்லியர்ஸ் ஜோடி தொடக்கத்திலிருந்தே விளாச தொடங்கியது. அம்லா நிதானமாக விளையாட, கேப்டன் டீ வில்லியர்ஸ் அதிரடியாக சுழற்றினார். வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அதன் பின்னரும் தன்னம்பிக்கையுடன் விளையாடி, 41 பந்துகளில் சதம் அடித்து ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாட வைத்தார்.
இங்கிலாந்து பவுலர்களை மெட்டையிலே ஆட்டிய டீ வில்லியர்ஸ், 15 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் உதவியுடன் 116 ரன்கள் (51 பந்தில், ஸ்ட்ரைக் ரேட் – 227.55) எடுத்தார். அவருடன் அம்லா 29* ரன்களுடன் இருப்பதால், 12.2 ஓவரிலேயே தென்னாப்பிரிக்கா 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடரில் இதுவரை 3 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தென்னாப்பிரிக்கா, செமி ஃபைனல் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. 41 வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்த டீ வில்லியர்ஸ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.