சென்னை : மாநிலங்களவை எம்.பி.யாக நீங்கள் பதவியேற்றபோது உங்களது குரல் அவையில் எதிரொலித்த தருணம் என்றென்றும் என்னுடைய மனதில் நிலைத்திருக்கும்” என்று தந்தை கமல்ஹாசனுக்கு மகள் சுருதிஹாசன் இன்ஸ்டாவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார்.
அப்போது, “மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசின் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்றுவதையும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்று உறுதியேற்கிறேன்” என்று தமிழில் கூறி பதவி ஏற்றார்.
இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அலுவல்களில் கையெழுத்திட்டார். அவருக்கு நாடாளுமன்ற மேலவை சபாநாயகர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, அவர் தனது மகள் சுருதிஹாசன் உடன் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்க வேண்டிய இடத்தில், பகுத்தறிவுடன் அதைச் செய்வேன். ஆதரிக்க வேண்டிய இடத்தில், நான் அதை உறுதியுடன் செய்வேன். ஆலோசனை வழங்க வேண்டிய இடத்தில், அதை ஆக்கப்பூர்வமாக செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“மாநிலங்களவை எம்.பி.யாக நீங்கள் பதவியேற்றபோது உங்களது குரல் அவையில் எதிரொலித்த தருணம் என்றென்றும் என்னுடைய மனதில் நிலைத்திருக்கும்” என்று தந்தை கமல்ஹாசனுக்கு மகள் சுருதிஹாசன் இன்ஸ்டாவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.