நம் அடையாள ஆவணங்களில் ஆதார் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. வங்கிக் கணக்குகள், மொபைல் இணைப்புகள், கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் அது இணைக்கப்பட்டிருப்பதால், ஆதார் எவ்வாறு மற்றும் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை சரிபார்த்து பார்த்து கொண்டே இருப்பது முக்கியம். ஏனெனில், உங்கள் அனுமதியின்றி அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது அடையாளத் திருட்டுக்கும் காரணமாக இருக்கலாம்.

இதனைத் தெரிந்துகொள்வதற்காக UIDAI இணையதளமானது ஒரு ‘ஆதார் ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி சர்வீஸ்’ என்ற வசதியை வழங்குகிறது. அதை பயன்படுத்த, முதலில் UIDAI இணையதளத்துக்குச் சென்று ‘My Aadhaar’ பகுதியில் இந்த சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு கேப்சா கோடையும் உள்ளிட்டால், OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். அதை உள்ளிட்டவுடன் கடந்த 6 மாதங்களில் எங்கு, எப்போது, எத்தனை முறை உங்கள் ஆதார் பயன்படுத்தப்பட்டது என்பதையும், OTP அல்லது பயோமெட்ரிக் வழியாகச் சரிபார்ப்பு நடந்ததா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
அந்த பட்டியலில், சரிபார்த்த நிறுவனங்களின் பெயர்கள், பயன்படுத்திய நேரம், தேதி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த சரிபார்ப்பின் போது என்ன தகவல்கள் பகிரப்பட்டன என்பதை நேரடியாகக் காண முடியாது. இருந்தாலும், உங்கள் அறிவுமின்றி ஆதார் எங்கேயாவது பயன்படுத்தப்பட்டதா என அறிந்து கொண்டு, UIDAI அல்லது சம்பந்தப்பட்ட சேவை நிறுவனத்திடம் புகார் அளிக்க முடியும்.
இந்தச் செயல்முறை முற்றிலும் இலவசமாகவும், ஆன்லைனில் எளிதாகவும் செய்யக்கூடியது. எந்த ஆவணங்களும் தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சம். ஆதார் நம்பர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சோதனை அவ்வப்போது செய்யப்பட வேண்டும். இது உங்கள் தனிப்பட்ட தகவல்களை தவறான வகையில் பயன்படுத்தப்படுவதிலிருந்து தடுக்க உதவும்.