செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கம் தற்போது முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்-இல் பெரிதாகவேப் பட்டுள்ளது. 2026ஆம் நிதியாண்டில் 12,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பலரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், நம் நாட்டின் மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியிலும் செயல்படும் முக்கிய ஐடி நிறுவனமாகும். பல்வேறு பிராந்தியங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனம், தற்போது தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப தனது பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், சில வேலைகள் தேவையற்றவையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி நீக்க நடவடிக்கை, நிறுவனத்தின் மிடில் மற்றும் சீனியர் மேனேஜ்மெண்ட் ஊழியர்களை பெரிதும் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்தை விரிவாக்கம், நிறுவன மாற்றம் ஆகிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் விளக்கமளித்துள்ளது. இதன் காரணமாக, நிறுவன சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிறுவனத்தின் சிஇஓ கிரிதிவாசன் கூறியதாவது, தொழில்நுட்ப மாற்றங்களுடன் பொருந்தும் வகையில் நிறுவனத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும், இதன் தாக்கம் ஊழியர்களில் 2% பேரை பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
தற்போது மைக்ரோசாஃப்ட், இன்டெல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், டிசிஎஸ் நிறுவனம் இதுவரை எவ்வித பணிநீக்கம் மேற்கொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது 12,200 பணியிடங்கள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.