பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், உணவின்றி தவிக்கும் மக்களின் நிலை மிகவும் மோசமானதாக உள்ள நிலையில், மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள மூன்று முக்கிய பகுதிகளில் தினசரி 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து காசாவை மீட்கும் நோக்கில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் இதுவரை 60,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நாடுகள் மற்றும் ஐ.நா. மூலம் வழங்கப்படும் உணவு மற்றும் மருந்து போன்ற நிவாரண பொருட்கள், ஆரம்பத்தில் பல டிரக்குகளின் வாயிலாக காசாவுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகள் அவற்றை திருடுகிறார்கள் என்ற காரணத்தால் இஸ்ரேல் நிவாரணங்களை தடை செய்தது. அதன் பின் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் வாயிலாக மட்டும், தினசரி 65 டிரக்குகள் அனுமதிக்கப்படுகின்றன.
நிவாரணம் கிடைக்காத மக்கள் சில நேரங்களில் இஸ்ரேல் படைகளை எதிர்த்து போராடும்போது துப்பாக்கிச் சூடுகள் நடக்கின்றன. கடந்த மே மாதம் முதல் இதுபோன்ற சம்பவங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் ஆகியவைகளின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமடைய, உலக நாடுகளின் அழுத்தமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ் மற்றும் முவாசி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் உணவின்றி வாடாதவாறு, மாவு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரண பைகளை வான்வழியாக வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.