இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் தனுஷ், திரையுலகில் நடிப்பதற்கான தன்னுடைய பயணம் பற்றி உணர்ச்சி மிகுந்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷுக்கு ஆரம்பத்தில் நடிகராகும் எண்ணமே இல்லையாம். உண்மையில், அவர் விரும்பியது ஒரு சமையல் கலைஞராகி அந்த துறையில் பிரபலமடைவதே! ஆனால், அவரது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் அந்த ஆசையை ஏற்க மறுத்துவிட்டனர்.

தனுஷ் கூறியதுபோல, “நான் நடிக்க மாட்டேன் அப்பா, சமைக்க தான் போவேன்” என பலமுறை அழுதும், கெஞ்சியும், அடம்பிடித்தும், யாரும் அவரது ஆசைக்கு வழிவிடவில்லை. என்னை சமையல் கலைஞனாக வளர விடமாட்டார்கள் என்பதை உணர்ந்து, இறுதியாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இக்காட்சி அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் மாறியது.
அன்று தனுஷின் கண்ணீரை பார்க்கவும் மனம் மாறாத கஸ்தூரி ராஜாவுக்கும் செல்வராகவனுக்கும், இன்று நன்றி சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்தத் ‘தவறான கட்டாயம்’ தான், நமக்கு இன்றைய நடிப்பு ராட்சசனான தனுஷை கொடுத்துள்ளது.
வெங்கடேஷ் பிரபு என்ற உண்மை பெயரை வைத்திருந்த தனுஷ், திரையுலகில் முன்னமே இருந்த பிரபு மற்றும் பிரபு தேவாவுடன் மோதல் வரக்கூடாதென, ‘குருதிப்புனல்’ படத்தில் கமலின் பாத்திரமான ‘தனுஷ்’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தார். இன்று அந்த பெயர் உலகத்தையே அடைந்துவிட்டது. ஹாலிவுட் வரை தனது தடங்களை பதித்து விட்டார். வடிவம், வசன ஆற்றல் என எதிலும் தொடக்கத்தில் கேலி கண்டவர் தான் இன்று பல மொழிப் படங்களில் நடிக்கும் பன்முக கலைஞர்.
தன் சிவ பக்தி, ‘ஓம் நமச்சிவாய’ என்ற அடிக்கடி உச்சரிப்புகள், மகன்களுக்கு ‘யாத்ரா’ மற்றும் ‘லிங்கா’ என பெயர் சூட்டியிருப்பது அனைத்தும் தனுஷின் ஆழமான ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், அவர் கூறும் வரிகள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகும் – “என் ஆசையை நிறைவேற்றாமல் விட்டதற்காக என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நன்றி!”