புதுடில்லி: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான இந்திய அரசின் நடவடிக்கைகளை சந்தேகிக்காதீர்கள் என எதிர்கட்சிகளிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். மக்களவையில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது:-
பாகிஸ்தான், இந்தியாவின் பதில் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு கெஞ்சியது. பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, தாக்குதலை நிறுத்த கோரிக்கை வைத்தது. பஹல்காமில் இந்திய பெண்களின் குங்குமத்தை பறித்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை. பஹல்காம் தாக்குதலில் குங்குமத்தை இழந்த சகோதரிகளுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
ஆபேரஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய படைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய விமானப்படையின் வலிமையை உலகமே பார்த்து வியந்தது. இந்திய படைகள் எல்லையை மட்டுமல்ல, நாட்டின் தன்மானத்தையும் காப்பாற்றியுள்ளன. பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளை நமது விமானப் படை தகர்த்தது.
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியா முழுவதுமாக முறியடித்தது. அணு ஆயுதத்தை வைத்து பாகிஸ்தான் மிரட்டியது. இந்திய முப்படைகள் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை. எதிரியின் எத்தனை தளங்களை அழித்தோம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை. நமக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டது என்பது தொடர்பாக மட்டுமே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் நம் தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார்கள். பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் பாகிஸ்தான் அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பதிலளிக்கப்படும். இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருக்கிறது. தோழமை நடவடிக்கைகளை தான் முதலில் முன்னெடுக்கும்.
ஆனால், இந்தியாவை தாக்க நினைத்தால் அவர்களின் கையை முறித்துவிடுவோம். பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம். ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.