சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய 29 வயதான அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் பேராசிரியை நிகிதா, தனது தாயார் சிவகாமியுடன் கோவிலுக்கு சென்றபோது காரை பார்க்கிங் செய்ய சாவியை காவலாளி அஜித்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள். பின்னர், நிகிதா தனது நகை மாயமானதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரை மானாமதுரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று, அவர் மோதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. பின்னர் தமிழக அரசு அதை சிபிஐக்கு மாற்றியது. கடந்த 15 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஜூலை 23ஆம் தேதி, நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி மூன்றே காலணுக்கு மேலாக பதிலளித்தனர். இரண்டாவது கட்ட விசாரணையும் 6.5 மணி நேரமாக நடைபெற்றது.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியை நிகிதா, “எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை. ஒருவரையே குற்றம் சாட்டி திசை திருப்ப முயல்கிறார்கள். பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்புகிறார்கள். அஜித்குமார் மரணம் நம்மை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் நாங்கள் காவலரிடம் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் புகார் அளித்தது மட்டுமே. அதற்குப் பிறகு நடந்ததைப் பற்றி எங்களுக்குத் தெரியாது,” என உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், “சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்களும், தவறான குற்றச்சாட்டுகளும் எதிர்கொள்கிறோம். வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை மதிக்கிறோம், எங்கள் தரப்பு உண்மையைக் கூறத் தயாராக இருக்கிறோம்,” என கூறிய அவர், அஜித்குமாரின் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளாததாகவும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் செல்லத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.