விஜயவாடா: ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய நிதி குறித்து சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களுடன் மத்திய தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் விஜயவாடாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு, குறிப்பாக தலைநகர் அமராவதி வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டை இலக்காகக் கொண்டு, பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
போலவரம் அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசும் முடிவெடுத்துள்ளது. ஆந்திராவின் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் மொத்தம் ரூ.50,474 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. விசாகப்பட்டினம் – சென்னை, பெங்களூரு – சென்னை ஆகிய வழித்தடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.