மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற துயரமான குண்டுவெடிப்பு வழக்கு, 17 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பின் இன்று (ஜூலை 31) முடிவுக்கு வர இருக்கிறது. மும்பையில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 29, 2008 அன்று இரவு பிக்கு சௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோஹித் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, வெடிவெப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் தாக்கூரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுவரை 323 அரசு தரப்பு சாட்சிகள், 8 பாதுகாப்பு தரப்பு சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்பு பிரிவு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் NIA இந்த விசாரணையைத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தன. வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று சிறப்பு நீதிபதி ஏ.கே. லஹோட்டி தீர்ப்பு வழங்க உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மதவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தியது. இன்று வெளியாகவுள்ள தீர்ப்பு, பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.