பெங்களூரு: கர்நாடகாவின் தர்மஸ்தலா பகுதியில், பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற புகாரின் அடிப்படையில் நடந்து வரும் விசாரணை எதிர்பாராத திருப்பத்தை பெற்றுள்ளது. நேத்ராவதி ஆற்றங்கரையில் தோண்டிய ஆறாவது இடத்தில் இருந்து, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு, மற்றும் ஒரு உடை எலாஸ்டிக் போன்றவற்றை போலீசார் மீட்டனர்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்பட்டு கொல்லப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்டதாக போலீசில் பரபரப்பான புகார் அளித்திருந்தார். இதையடுத்து, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுத்துறை 13 சந்தேகிக்கப்படும் இடங்களை அடையாளம் கண்டறிந்து தோண்டும் பணியைத் தொடங்கியது.
முன்பு தோண்டப்பட்ட ஐந்து இடங்களில் எதுவும் கிடைக்காத நிலையில், ஆறாவது இடத்தில் ஏற்பட்ட கண்டெடுப்பு விசாரணைக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தற்சமயம் சிக்கிய எலும்புகள் மற்றும் பொருட்கள் நீதிமன்ற மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது உண்மையில் குற்றவியல் சம்பவம் தொடர்பானதா, அல்லது அடையாளம் தெரியாதவர்களின் அதிகாரபூர்வ உடல் புதைப்பா என்பது விரைவில் உறுதி செய்யப்படவுள்ளது.
இதே நேரத்தில், தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்து, இது அவர்களால் புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாதவர்களின் உடல்களாக இருக்கலாம் என்றும், அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. எனவே, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தற்போது அந்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். வழக்கு மேலும் பல பரிமாணங்களில் விரியும் சூழ்நிலை உருவாகி வருகிறது.