மாடித்தோட்டம் என்பது வெறும் பொழுதுபோக்காக அல்ல, அதை திட்டமிட்டு, சூழ்நிலை மற்றும் பருவநிலையை புரிந்துகொண்டு செய்ய வேண்டிய பொறுப்பான செயல். குறிப்பாக நிழல் தேவையற்ற செடிகளை நிழலில் வைத்துவிட்டால் அவை செழித்து வளராது. அதுபோல, வெயிலில் வளர வேண்டிய செடிகளை வேறு சூழ்நிலையில் வைப்பது தவறான முடிவைத் தரும். ஒவ்வொரு செடியும் தனக்கு ஏற்ற இடமும், நேரமும் இருந்தால்தான் வளர்ச்சியும் பயனும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் பாரம்பரியமாகக் கருதப்படும் ஆடிப்பட்டம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருகிறது. இப்பருவத்தில் சூரிய ஒளியும் மிதமான மழையும் இருக்கும் காரணத்தால், பலவிதமான காய்கறிகள் மற்றும் கொடி வகை தாவரங்களை வளர்க்க ஏற்ற நேரமாக அமைகிறது. தக்காளி, முருங்கைக்காய், சுரைக்காய், காராமணி, பூசணிக்காய், முருங்கைக் கீரை, பசலைக்கீரை போன்றவை இந்த காலத்தில் சிறப்பாக வளரும்.
வெயில் என்பது அனைத்துச் செடிகளுக்கும் எதிரியானது என்று நினைப்பது தவறு. உண்மையில், சில வகை செடிகள் நேரடி வெயிலை விரும்பும். மாதுளை, நெல்லி போன்ற பழவகைகள் மற்றும் காராமணி, மிளகாய் போன்றவை வெயிலில் சிறப்பாக வளர்கின்றன. அதேபோல கீரைகளும் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டவை என்பதாலும் வெயில் காலங்களிலும் சாகுபடி செய்வது சாத்தியமே.
குளிர்காலமான நவம்பர் முதல் ஜனவரி வரை முட்டைகோஸ், பீன்ஸ், குடமிளகாய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள், பருப்பு கீரை, தண்டுக்கீரை போன்ற கீரைகள் நன்றாக வளரும். இதேபோல, மிதமான குளிரில் ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி போன்ற பழவகைகளையும் வளர்க்க முடியும். எனவே பருவநிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டால், ஒரு சிறிய மாடி கூட பசுமை தோட்டமாக மாறும் என்பது உறுதி.