திருவள்ளூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் 100 நாள் நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். நேற்று மாலை திருவள்ளூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
மாவட்டச் செயலாளர் இ.தினேஷ் குமார் இதற்குத் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் அம்பத்தூர் கே.என்.சேகர், ஆலப்பாக்கம் லயன் ஏ.ஆர்.டில்லிபாபு, வி.பாலா என்கிற பாலயோகி, என்.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அன்புமணி பேசினார்; டாக்டர் ராமதாஸ் பாமகவை ஏன் தொடங்கினார். சமூக நீதிப் போராளி டாக்டர் ராமதாஸ் ஏன் இந்தக் கட்சியைத் தொடங்கினார் தெரியுமா?

அடிமட்ட மக்கள் முன்னேற வேண்டும். தமிழக மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்வதற்காக ராமதாஸ் பாமகவைத் தொடங்கினார். சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் மட்டுமே பின்தங்கிய சமூகங்களின் உண்மையான நிலையைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க முடியும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சாதி வாரியான கணக்கெடுப்பை முடித்துள்ளன. சில மாநிலங்கள் தற்போது அதை நடத்தி வருகின்றன. எனவே, தமிழ்நாட்டிலும் விரைவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.