சென்னை: மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேட்டூர் அணைக்கு நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது குறித்து டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை நெருங்கும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணை நீர் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.