உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அதை சிவில் வழக்காகவே விசாரிக்க வேண்டியிருந்த நிலையில், அதை கிரிமினல் வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டது. இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிபதிகள், இது மிகவும் தவறான அணுகுமுறை எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை உயர்நீதிமன்றம் புரிந்து கொள்ள தவறியிருப்பதை சுட்டிக்காட்டினர். கிரிமினல் நம்பிக்கை மோசடி என்ற அடிப்படையில் இந்த வழக்கை மாற்றியமைத்தது முற்றிலும் நீதிமுறை செயல்முறைக்கு எதிரானது எனவும் கூறப்பட்டது.
மேலும், இவ்வகையான தவறுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக, வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி வெளியிட்ட உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அந்த நீதிபதி ஓய்வு பெறும் வரை அவரிடம் எந்தவொரு கிரிமினல் வழக்குகளும் ஒப்படைக்கக் கூடாது எனவும், இனி அவர் டிவிஷன் பெஞ்ச் அமர்வில் மட்டுமே அமர வேண்டும் என்றும் உத்தரவு கூறப்பட்டுள்ளது. தனி நீதிபதியாக அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், கிரிமினல் வழக்குகள் அல்லாத வழக்குகளை மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.