சென்னை: கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வரை சந்தித்த கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் சமீபத்தில் நடந்த ஐடி ஊழியர் கவின் கௌரவக் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
எனவே, வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த இந்த கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.