தமிழக அரசு வெளியிட்ட மாநில பள்ளிக் கல்விக் கொள்கை விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணியின் முடிவாக, 650 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், தமிழ் மொழியை முதன்மையான மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய முதல்வர், அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று வலியுறுத்தினார். கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் 75% பேர் உயர்கல்விக்கு சென்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தாய்மொழி தமிழ் கல்விக் கொள்கையின் அடிப்படை ஆதாரமாக இருப்பதைத் தொடர்ந்து, இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் நிலவுவதாகத் தெரிவித்தார்.
இனி தமிழ்நாட்டில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். மாணவர்களை படித்து மனப்பாடம் செய்ய வைக்கும் பழைய முறையிலிருந்து விலகி, சிந்தித்து கேள்விகள் எழுப்பும் திறனோடு கல்வி அளிக்கப்படும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும், அவர்களை ஒரு புதிய உலகிற்கு தயாராக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய போட்டிகளில் அவர்கள் தைரியமாக செயல்படலாம் என்பதே அரசின் நோக்கம். தமிழ்நாட்டுக்கே உரித்தான தனித்துவம் கொண்ட இந்த கொள்கை, எதிர்காலத்திற்கான புரட்சிகரமான அடையாளமாக விளங்கும்.