சென்னை: மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசு அறிவித்துள்ள மாநிலக் கல்விக் கொள்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த புதிய கொள்கை, தமிழ்நாடு அரசின் தனித்துவமான மற்றும் முன்னேற்றமான எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன், தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதில் அவர், கல்வியை அனைவருக்கும் எளிதாகவும், சமத்துவமாகவும் மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

கல்வி என்பது வசதி உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா மாணவர்களுக்கும், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு தரமாகக் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்தக் கொள்கை அமைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய உலக சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை மாணவர்களிடம் வளர்த்திடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் பாராட்டினார்.
முக்கியமாக, தேவையற்ற பொதுத் தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பது, நியாயமற்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான உத்திகள் இடம்பெற்றிருப்பது, இருமொழிக் கொள்கை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை தனிப்பட்ட பாராட்டைப் பெறுகின்றன.
தரமான கல்வியை இலக்காகக் கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழுவையும் அவர் மனமாரப் பாராட்டியுள்ளார்.