டோக்கியோ: உலகின் மிக விலை உயர்ந்த போர் விமானங்களில் ஒன்றான பிரிட்டனின் எப்-35பி போர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜப்பானின் கிரிஷிமா நகரில் உள்ள ககோஷிமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம், பிரிட்டனின் ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், இதே வகை எப்-35பி போர் விமானம், கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது. அப்போது 25 பிரிட்டன் பொறியாளர்கள் வந்து 37 நாட்கள் பழுது பார்த்து, பின்னர் விமானம் தாயகம் திரும்பியது.
ஜப்பானில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது, ககோஷிமா விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 20 நிமிடங்கள் மூடப்பட்டது. இதனால் புறப்பட இருந்த 6 விமானங்கள் மற்றும் வந்து சேர வேண்டிய பல விமானங்கள் தாமதமடைந்தன. இந்த நிகழ்வு, விமான நிலைய செயல்பாடுகளில் தற்காலிக இடையூறை ஏற்படுத்தியது.
தற்போது, ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் உட்பட பல்வேறு கப்பல்கள், ஜப்பான் மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து “ஆப்பரேஷன் ஹைமாஸ்ட்” எனப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பயிற்சி ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது.