அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, திமுகவில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாமல் இலக்கிய அணித் தலைவர் பொறுப்பைப் பெற்றுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிக் கலகங்களால் பலர் விலகி திமுகவுக்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோரின் பிரிவுகள் கட்சியில் நிலைதடுமாற்றத்தை ஏற்படுத்தின.

2018ல் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி விரைவில் கரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் அமைச்சராகவும், மண்டலப் பொறுப்பாளராகவும் உயர்ந்தார். அமமுகவில் இருந்து வந்த தங்க தமிழ்செல்வன் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், தேனி வடக்கு மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு ஏற்றார். பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், லட்சுமணன், வி.பி.கலைராஜன் உள்ளிட்டோருக்கும் மாவட்ட மற்றும் அணிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுக் கட்சியிலிருந்து வந்தாலும் திறமைக்கு மரியாதை அளிக்கும் கட்சியாக திமுக இருப்பதாக அதன் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதனால் நீண்ட காலமாக கட்சியில் இருந்து பதவி பெறாதோர் அதிருப்தி அடைவதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் அமைச்சரவையிலும் முன்னாள் அதிமுகவினர் பலர் இடம்பெற்றுள்ளனர். எதிர்காலத்திலும் அதிமுக தலைவர்கள் திமுகவுக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.