நேபாளம், காத்மாண்டு: மலை சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், நேபாள அரசு 19,000 அடி முதல் 23,000 அடி உயரத்துள்ள 97 குறைந்த உயரமுடைய மலைச் சிகரங்களில் இலவசமாக ஏற அனுமதித்துள்ளது. இதன் மூலம் மலையேற்ற சுற்றுலா வளர்ச்சி பெற்று, தொலைதூர பகுதிகளில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், உள்ளூர் சமூகங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் (29,031 அடி) சிகரத்தில் ஏற விரும்புவோருக்கு தற்போது பெரும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் அதன் கட்டணம் 10 லட்சம் ரூபாயிலிருந்து 13 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. இதனால், மலையேற்ற அனுபவம் குறைந்தவர்களுக்காக இந்த 97 சிறிய சிகரங்களில் இலவச ஏறுதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள், குறைந்த உயரத்தில் ஏறுதல் அனுபவம் பெற்றபின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவும் உதவுவதாகும். நேபாள அரசு, எவரெஸ்ட் ஏறும் முன் இவற்றில் ஏறியிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இந்த நடவடிக்கை சுற்றுலா மற்றும் பணியாளர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
மலையேற்றத் துறையில் இதன் தாக்கம் உண்டு என்றும், சுற்றுலா வளர்ச்சியோடு நாட்டின் பொருளாதாரத்துக்கும் இது புதிய ஊக்கம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலாக, சுற்றுலா பயணிகள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள் என்பதும் இந்த திட்டத்தின் எதிர்கால இலக்காகும்.