கான்பரா: காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், உலக நாடுகள் இஸ்ரேலை அழுத்தம் கொடுத்து போரைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, காசா தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் பாலஸ்தீனத்தை ஒரு சுயாட்சி நாடாக அங்கீகரிக்கப்போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு, சர்வதேச அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.

2023 அக்டோபரில் திடீரென ஹமாஸ் படை இஸ்ரேலுக்குள் நுழைந்து கடுமையான தாக்குதலை நடத்தியது. அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்று, பலரை பணையக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக, இஸ்ரேல் காசாவில் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
இஸ்ரேல், ஹமாஸை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என்று அறிவித்துள்ளது. இதனால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்; பல லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். உணவு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியங்கள் கடுமையாக பஞ்சமடைந்துள்ளன.
இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவின் எச்சரிக்கை, இஸ்ரேலுக்கு கூடுதல் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நடவடிக்கை, மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றத்தை குறிக்கக்கூடும். அடுத்த சில வாரங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.