வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தைத் தொடங்கியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். அந்த நேரத்தில், அவர் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். அதிபர் டிரம்ப் அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவருக்கு இரவு விருந்து அளித்தார்.
இந்த சூழ்நிலையில், அசிம் முனீர் அமெரிக்கா திரும்பியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அசிம் முனீர், சென்ட்காம்-ன் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் ஓய்வு விழாவிலும், டம்பாவில் நடைபெற்ற புதிய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டார். அமெரிக்காவில் பேசிய அசிம் முனீர் கூறியதாவது:-

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் முடிவு 20 மில்லியன் மக்களை பட்டினியால் வாடும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா அணை கட்டும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். இந்தியா அணை கட்டினால், அதை 10 ஏவுகணைகளால் அழிப்போம். சிந்து நதி இந்தியாவின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை. பாகிஸ்தானின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், பாதி உலகத்தை அழித்துவிடுவோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.