ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் ரத்தம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதால், சென்சார் வாரியம் இதற்கான தடைகளை விதித்துள்ளது. இதனையடுத்து, AGS, PVR போன்ற திரையரங்குகள் 18 வயதிற்குட்பட்டவர்கள் தியேட்டர்களுக்கு வர வேண்டாம் என அறிவித்துள்ளன. ரஜினி படம் பார்க்கும் சிறுவர்கள் அதிகம் என்பதால், இது வசூல் மீது தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

புக்கிங் மாஸ் வெற்றியாக நடைபெற்று வரும் நிலையில், சில பகுதிகளில் பிளாக் டிக்கெட் விற்பனை நடந்துவருவது மற்றொரு சர்ச்சையாகி வருகிறது. கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடைபெறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் சட்ட மீறல்களை குறித்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், தயாரிப்பாளர் தனஞ்ஞெயன் இந்த ஏ சான்றிதழ் ஒரு பலவீனமாக பார்க்கப்படலாம் எனக் கூறியுள்ளார். அதேசமயம், திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “இதுபோன்ற தடைகளை பெரும்பாலான திரையரங்குகள் பின்பற்றுவதில்லை. பிளாக் டிக்கெட்டும், வயது வரம்பையும் மீறுவதே வழக்கம்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது இன்னும் பரபரப்பாகவே இருக்கிறது.