இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், ‘ஆப்பரேஷன் சிந்து’ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் அழித்தன. இதற்கு முன்பாகவே, மத்திய அரசு பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுத்து, சிந்து நதிக்குக் குறுக்கே புதிய அணை அமைக்கும் முடிவை எடுத்தது.

இந்த ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தானது. இதில் சட்லஜ், பியாஸ், ராவி எனும் கிழக்கு நதிகளின் நீர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. சிந்து, ஜீலம், செனாப் எனும் மேற்கு நதிகளின் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த அமைப்பு பல தசாப்தங்களாக நீடித்தது.
ஆனால் சமீபத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தானுக்கு நீர் செல்லவில்லை. இதனால் அந்நாட்டின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்து, சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் இருந்து மீண்டும் நீர் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த கோரிக்கை குறித்து இந்திய அரசு எவ்வாறு பதிலளிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும், இரு நாடுகளின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை கருதி, இது வரவிருக்கும் நாட்களில் முக்கிய விவகாரமாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.