டிரினிடாட்: செவ்வாய்க்கிழமை இரவு டிரினிடாட்டில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. தனது 19-வது சதத்தை அடித்த கேப்டன் ஷாய் ஹோப், 94 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்தார்.
இறுதி கட்டத்தில் அவருக்கு ஆதரவாக விளையாடிய ஜஸ்டின் கிரீவ்ஸ், 24 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தார். கடைசி 8 ஓவர்களில் 7-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 110 ரன்கள் சேர்த்தது. எவின் லூயிஸ் 37 ரன்களும், ராஸ்டன் சேஸ் 36 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணிக்காக நசீம் ஷா மற்றும் அப்ரார் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

295 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் 29.3 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சல்மான் அகா 30, முகமது நவாஸ் 23, ஹசன் நவாஸ் 13, பாபர் அசாம் 9 மற்றும் நசீம் ஷா 6 ரன்கள் எடுத்தனர். சைம் அயூப், அப்துல்லா ஷபிக், கேப்டன் முகமது ரிஸ்வான் ஹசன் அலி மற்றும் அப்ரார் அகமது ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக, ஜெய்டன் சீல்ஸ் 7.2 ஓவர்களில் 18 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் 202 ரன்கள் வித்தியாசத்தில் 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலளித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் இப்போது வென்றுள்ளது. அந்த அணி கடைசியாக 1991-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றது.