நாமக்கல்: நாமக்கல்லில் ஆக., 2, 3 ஆகிய இரண்டு நாட்களில், அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:கொல்லிமலை பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையெழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த, வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி, 17, 18 ஆகிய நாள்களில், அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில், வரும் ஆக., 2, 3 ஆகிய இரண்டு நாட்களில், அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவிற்காக, நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலை பகுதிக்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்.
அதனால், வரும் 3ல், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த நாளை ஈடு-செய்யும் வகையில், ஆக., 17ல், பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை. அதனால், உள்ளூர் விடு-முறை நாளான, வரும் ஆக., 3ல், மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.