ஜெய் கோடக், ஐசிஐசிஐ வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் 90% மக்கள் மாதம் ரூ.25,000-க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், அவர்களின் நிதி நிலையை கருத்தில் கொள்ளாமல், மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியிருப்பது தவறு என அவர் கூறியுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கி, 2025 ஆகஸ்ட் 1 முதல் புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை, பெருநகர கிளைகளில் ரூ.10,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது. புறநகர் கிளைகளில் ரூ.5,000 இலிருந்து ரூ.25,000 ஆகவும், கிராமப்புற கிளைகளில் ரூ.5,000 இலிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜெய் கோடக் தனது எக்ஸ் பதிவில், ரூ.50,000 என்பது ஒரு இந்தியரின் மாதாந்திர வருமானத்தின் 94% அளவுக்கு சமம் என்றும், இதனை எப்போதும் கணக்கில் வைத்திருக்க வேண்டியிருப்பது அபராதத்திற்கு வழிவகுக்கும் என்றும் விமர்சித்தார். உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, கீழ்மட்ட 50% மக்கள் மாதம் ரூ.9,500-க்கும் குறைவாகவே சம்பாதிப்பதாகவும், மேல்மட்ட 5% பேர் மட்டுமே ரூ.64,380-க்கும் அதிகம் சம்பாதிப்பதாகவும் கூறினார்.
கிளைச் செலவுகள் அதிகமாக இருக்கலாம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், டிஜிட்டல் முறையை முன்னுரிமைப்படுத்துவது அனைவரையும் உள்ளடக்கும் தீர்வாக இருக்கும் எனவும் தெரிவித்தார். வங்கிகள் இதைச் செய்யாவிட்டால், தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள் அதைச் செய்வார்கள் என்றும் வங்கி என்பது அனைவருக்கும் தேவையானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய விதிகளின் படி, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பூர்த்தி செய்யாதவர்கள் பற்றாக்குறையின் 6% அல்லது ரூ.500 அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மாற்றம் புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏற்கனவே குறைந்தபட்ச இருப்புக் கட்டணங்களை நீக்கியுள்ள நிலையில், மற்ற வங்கிகள் தளர்வுகளை அறிவித்துள்ளன. ஆனால், ஐசிஐசிஐ வங்கியின் இந்த முடிவு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.