சென்னை அண்ணா சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தேனாம்பேட்டை பகுதியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அண்ணா சாலை சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் நெரிசல் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கிலோமீட்டர் தூரம் கடக்க 25 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது. நந்தனம் மற்றும் சிஐடி நகர் சந்திப்புகளில் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு காத்திருக்கின்றன.

இந்த நெரிசலைக் குறைக்க 3.20 கி.மீ நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்ட நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2024 ஜனவரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மேம்பாலப் பணிகளை எளிதாக்கும் நோக்கில் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகின்றன.
சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி சந்திப்பு, வடக்கு போக் சாலை, விஜயராகவா சாலை வழியாக அண்ணா சாலையை அடைய வேண்டும். அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப வேண்டும்.
தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை மற்றும் விஜயராகவா சாலை வழியாக செல்ல வேண்டும். தெற்கு போக் சாலையில் இருந்து மா.போ.சி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப முடியாது; பதிலாக வடக்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும்.
மேலும் அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவா சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. வாகன ஓட்டிகள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.