கோவை: கனமழை காரணமாக வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வால்பாறையில் கனமழை தொடர்வதால் இன்று (ஜூலை 30) வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 31 முதல் ஆக.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை 10 மணி வரை கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.