பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 320 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் பெரிதும் தாமதமடைந்துள்ளன.

குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மலையோரமாக அமைந்துள்ள இந்த மாகாணத்தில் புனர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா, பட்டாகிராம் உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் இடிந்து விழுந்து பலர் சிக்கியுள்ளனர். வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
2000க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டாலும், சாலைகள் இடிந்து போனதால் கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் கொண்டு செல்வதில் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மீட்பு படையினர் நடந்தே சென்று உதவிக்கரம் நீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீட்பு பிரிவு செய்தித் தொடர்பாளர் பிலால் அகமது ஃபைசி கூறுகையில், “கனமழை மற்றும் நிலச்சரிவால் சாலைகள் முடங்கியுள்ளதால் மீட்பு பணி தடைபட்டுள்ளது. உயிருடன் இருக்கும் மக்களை முதலில் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சி செய்கிறோம்” என்றார்.
இதற்கிடையில், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கைபர் பக்துன்க்வா மட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தான் பகுதிகளிலும் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த இயற்கை பேரிடர் காரணமாக பாகிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி சர்வதேச உதவி அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.