ரஜினிகாந்த் நடித்த கூலி படம், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஏ’ சான்றிதழுடன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்றாலே ரத்தக் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்ததே. ஆனால், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கக் காரணமானது சத்யராஜ் கண்டுபிடித்த உடலை நொடியில் சாம்பலாக்கும் இயந்திரம்.

ஒரு மனித உடலை எளிதில் அழிக்கும் அந்த இயந்திரம் திரைக்கதை அளவில் வில்லனுக்கு உதவுவதாக இருந்தாலும், அதை திரையில் பார்க்கும் போது பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது. உடல் உறுப்புகளை கடத்தும் வில்லனாக நாகர்ஜுனா நடித்திருப்பதும், அவர் கொல்லும் உடலை எப்படி நிர்வகிப்பது தெரியாமல் இருப்பதும் இணையவாசிகளின் கிண்டலுக்கு உள்ளானது.
சிலர், “லோகேஷ் ஸ்குவிட் கேம் பார்த்ததில்லையா?” என்று கேள்வி எழுப்ப, மற்றொரு பக்கம், காவல்துறைக்கு படத்தில் முக்கியத்துவமே அளிக்கப்படாதது கூட விமர்சனமாக மாறியது.
மேலும், கூலியாக இருந்த சத்யராஜ், படத்தின் இரண்டாம் பாதியில் எப்படி அந்த இயந்திரத்தை உருவாக்கியவராக மாறினார் என்ற கேள்வியும் ரசிகர்களை குழப்பியது. இதனை, “நண்பன் படத்தில் வரும் வைரஸ் கண்டுபிடித்த சீரின் வேலை போலவே இருக்கிறது” என்று இணையத்தில் கலாய்த்தனர்.
மொத்தத்தில், கூலி படம் லோகேஷ் கனகராஜின் பாணியில் இல்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல படங்களின் காட்சிகளை சேர்த்து வைத்த மாதிரி உணர்வை தருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், ரஜினி, சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர்கான் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் வேலை செய்வதால் லோகேஷ் ரீ-டேக் கேட்க தயங்கியிருக்கலாம் என்றும், சிலர் ரஜினியின் தலையீடே படத்தை பலவீனமாக்கியிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டினர்.
இருப்பினும், படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.151 கோடி வசூல் செய்தது. வார இறுதிக்குள் ரூ.400 கோடிக்கு மேல் வசூலிக்கும் வாய்ப்பு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனால், விமர்சனங்களுக்கிடையிலும், வசூலில் கூலி படைப்பு வெற்றிப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.