பாட்னாவில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ‘வாக்காளர் உரிமை’ என்ற பெயரில் யாத்திரையை தொடங்கியுள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப்பணிகள் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தேர்தலில் வாக்காளர்களின் உரிமையை உறுதி செய்யும் நோக்கில், ராகுல் இந்த யாத்திரையை ஆரம்பித்துள்ளார்.
சாசாராம் பகுதியில் தொடங்கிய இந்த யாத்திரை, அடுத்த 15 நாட்களுக்கு பீஹாரின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். செப்டம்பர் 1 அன்று தலைநகர் பாட்னாவில் யாத்திரை நிறைவடைகிறது. பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த யாத்திரை மூலம் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது பிரச்சினைகளை அறிந்து, தேர்தலில் வாக்குரிமையை பாதுகாக்கும் அரசியல் முயற்சியில் ராகுல் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் பீஹாரின் எதிர்கால அரசியல் சூழலில் காங்கிரஸின் பங்கு வலுவாகும் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால் ஆட்சியிலுள்ள கூட்டணியோ, இந்த முயற்சியை அரசியல் நாடகம் என விமர்சிக்கிறது.