வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், ரஷ்ய அதிபர் புடினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த அவர், பல்வேறு அம்சங்களை விவாதித்தார். எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது மெலனியா எழுதிய அமைதிக்கான கடிதத்தை டிரம்ப், புடினிடம் நேரடியாக வழங்கினார். அதை இருநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் புடின் வாசித்தார். அந்தக் கடிதத்தில் ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் அமைதியான கனவு இருப்பதாகவும், உலகின் எந்தப் பகுதியில் பிறந்தாலும் குழந்தைகளின் பாதுகாப்பு, அன்பு, வாய்ப்புகள் ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர்களாக அடுத்த தலைமுறையின் நம்பிக்கையை வளர்ப்பது கடமை என்றும், தலைவர்களாக குழந்தைகளின் வாழ்க்கையை பாதுகாப்பது பொறுப்பாகும் என்றும் மெலனியா குறிப்பிட்டார். எல்லோருக்கும் கண்ணியமான உலகை உருவாக்க நாம் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சில குழந்தைகள் இருள் சூழ்ந்த சூழலில் சிரிப்பை கட்டாயப்படுத்துகிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்தை பறிக்கும் சக்திகளுக்கு எதிரான மௌன எதிர்ப்பாகும். இதை மாற்றுவது உங்கள் கையில் உள்ளது என்று புடினிடம் மெலனியா தெரிவித்துள்ளார்.
நீங்கள் குழந்தைகளின் சிரிப்பை மீட்டெடுக்க முடியும். அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் போது, அது ரஷ்யாவுக்கே அல்ல, மனிதகுலத்திற்கே சேவை செய்வதாகும். இன்று ஒரு பேனாவால் இதைச் செய்ய முடியும்; இதுவே சரியான நேரம் என மெலனியா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.