ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மத்திய மாகாணமான சுலவேசி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவான இந்த நிலநடுக்கம் சில விநாடிகளில் பல கட்டடங்களை குலுங்கச் செய்தது. வீடுகள் மற்றும் பொதுக்கட்டடங்கள் சிதறிப் போனது. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு தெருக்களில் ஓடினர்.

அங்குள்ள தேவாலயம் ஒன்றின் சுவர் சிதிலமடைந்து விழுந்தது. அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். மேலும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த மற்றொரு தேவாலயமும் கடுமையான சேதத்துக்குள்ளானது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சுலவேசியின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் போது சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் குலுங்கி விழுந்தன. அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. மக்கள் உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை.
அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிக்கையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்துக்குப் பின் சுனாமி அபாயம் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருந்தாலும் மக்கள் அச்சத்துடன் வெளியில் தங்கியுள்ளனர். சுலவேசியில் கடந்த சில ஆண்டுகளில் பல முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் தொடர்ந்து பயம்கொண்டுள்ளனர்.