நியூயார்க் நகரில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வொன்று உலகம் முழுவதையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் கதிர்வீச்சு ஆபத்து மட்டுமின்றி, உலகளாவிய அளவில் உணவு உற்பத்தியும் முற்றிலுமாக சிதைந்துவிடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மனித வாழ்வை நேரடியாக அச்சுறுத்தும் வகையில் பேரழிவு விளைவுகளை வெளிப்படுத்துகிறது.

அணு குண்டுகள் வெடிக்கும் போது மிகுந்த வெடிப்பு சக்தியால் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்தும் அழிந்து போகும் என்பது தெரிந்ததே. அதோடு கதிரியக்கப் பாதிப்பு பரவுவதால் பலரும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இதைத் தாண்டி சூரிய ஒளியே மறைந்து “அணு குளிர்காலம்” (nuclear winter) உருவாகும் அபாயம் உள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு பயிர்கள் வளர்வதற்கு இடையூறு ஏற்படும்.
ஆய்வில் உலகளவில் அதிக அளவில் பயிரிடப்படும் சோளத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. சுமார் 38,500க்கும் மேற்பட்ட இடங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டன. முடிவில், அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் சோள உற்பத்தி அதிகபட்சமாக 87% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் பில்லியன் கணக்கான மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சூழலை உருவாக்கும்.
வளிமண்டலத்தில் பரவும் புகை, தூசி, நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகியவை ஓசோன் அடுக்கு சேதமடைவதற்கும் வழிவகுக்கும். ஓசோன் படலம் சூரியனின் புற ஊதா கதிர்களை தடுக்கின்றது. அது சேதமடைந்தால் புற ஊதா கதிர்கள் நேரடியாக பூமிக்கு வந்தடையும். இதன் விளைவாக தாவரங்கள், பயிர்கள், உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
இந்த சூழலில் உலக உணவு உற்பத்தி மேலும் சரிவடையும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அணு போர் நடக்கும் நாடுகளிலேயே அல்லாது, உலகின் அனைத்து கண்டங்களும் இந்த பேரழிவின் தாக்கத்திற்குள்ளாகும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அணு ஆயுதப் போரின் விளைவுகள் சில வாரங்கள் அல்லது மாதங்களில் மட்டுமே அல்லாமல், பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதை இந்த ஆய்வு வெளிச்சமிட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் பல பில்லியன் பேர் பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மரணம் ஆகிய அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும்.
வல்லுநர்கள் இதை “மனித குலத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி” எனக் குறிப்பிட்டுள்ளனர். அணு ஆயுதப் போருக்கான ஆபத்தைத் தடுப்பதே எதிர்கால தலைமுறைகளின் உயிர்த் தற்காப்பு என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.