கோவையில் மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் தாமதமாக மேம்படுத்தப்பட்டதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிக்கல்கள் தினமும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், திருச்சி சாலை, உக்கடம் ஆகியவற்றை இணைக்கும் லங்கா கார்னர் பகுதியில் பெரும் நெரிசல் நிலவி வருகிறது. பீக் நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுவதால், ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவைகளுக்கும் தாமதம் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக கடந்த மாதங்களில் ரவுண்டானா அமைப்பு, யூ டர்ன் மாற்றங்கள் ஆகியவை செய்யப்பட்டன. ஆனால் அவை நிரந்தர பலனை அளிக்கவில்லை. எனவே, லங்கா கார்னர் பகுதியில் புதிய ஒருவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலத்தை கடந்தவுடன் இடதுபுறமாக திரும்பி உக்கடம் செல்லும் புதிய பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மணிக்கூண்டு, பெரியகடை சாலை வழியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்தப் பாதை சுமார் 805 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஏரியை ஒட்டி பயணித்தால் நேரடியாக வின்சென்ட் சாலைக்கு சென்று உக்கடம் பகுதியை எளிதில் அடையலாம். இந்த வழி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடம் குறித்த அறிவிப்புப் பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மக்களிடையே இந்த மாற்றம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் டவுன்ஹால், ரயில் நிலையம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.