சென்னை: பாரிஸில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மனு பக்கருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்தியா பதக்கப் பட்டியலில், பாராட்டுக்குரிய வகையில் துவங்கியுள்ளது. அதன்படி, பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற மனு பாக்கருக்கு எனது வாழ்த்துக்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஒலிம்பிக்கில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மனு பாகர், அடுத்தடுத்து உலகப் போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவோம்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மனு பகரால் இந்தியா பெருமை கொள்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பகர் முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது பாராட்டுக்குரியது. தாய்நாட்டை பெருமைப்படுத்திய அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் பயிற்சியாளரை பாராட்டுகிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு எனது வாழ்த்துகள். தொடர்ந்து நடைபெறும் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் வெற்றி பெற்று விளையாட்டு உலகில் அவர் முதலிடம் பெற வாழ்த்துகிறேன்.