கனிம வளம் அதிகமிருக்கும் ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் மண்ணுக்குள் தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், தியோகர், சுந்தர்கர், நபரங்பூர் மற்றும் கியோன்ஜர் பகுதிகளில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மயூர்பன்ச், மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் இடங்களிலும் ஆய்வுகள் தொடர்கின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரம்பகட்ட தகவல் மட்டுமே; முழுமையான அளவு இன்னும் தெரியவில்லை. கடந்த மார்ச் மாதம் ஒடிசா சட்டப்பேரவையில் சுரங்கத்துறை அமைச்சர் தங்கம் இருப்பதை அறிவித்திருந்தார். இப்போது ஆய்வுகள் உறுதியாகியதால், தங்கச் சுரங்கம் தோண்டுவதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியா 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கம் இறக்குமதி செய்தது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்கள் மட்டுமே. ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் எடுக்கப்பட்டால், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து இறக்குமதி குறையும் வாய்ப்பு உள்ளது. நிபுணர்கள் கூறும் படி, இதனால் தங்க விலை குறைய வாய்ப்பும் உள்ளது. ஒடிசா அரசு முதலில் தியோகர் பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை விரைவாக நிறைவேற்றுகிறது.