பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தர்மஸ்தலா வழக்கில், தமிழக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலின் சதி உள்ளதாக, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
தட்சிண கன்னடாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவிலுக்கு அருகில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.டி. விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த புகாரை அளித்தவர் தனது முந்தைய கூற்றை மாற்றி, ஒரு கும்பல் அழுத்தம் கொடுத்ததால் தவறாக கூறியதாக ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பெங்களூரில் பேசிய ஜனார்த்தன ரெட்டி, முதல்வர் சித்தராமையா எஸ்.ஐ.டி. விசாரணைக்கு விருப்பமின்றி இருந்தாலும், காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தத்தால் தான் அது தொடங்கியதாகக் கூறினார். அதற்கு முக்கிய காரணமாக சசிகாந்த் செந்தில் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், புகார்தாரருக்கும் செந்திலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், கோவிலின் புகழை குறைக்க திட்டமிட்ட சதியின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மஞ்சுநாதா கோவிலை குறித்த அவதூறு பரப்புவது மூலம் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கப்படுவதாகவும், பள்ளம் தோண்டிய இடங்களில் எதுவும் கிடைக்காததால் காங்கிரஸ் அரசு திணறி வருவதாகவும் ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரித்தால்தான் உண்மை வெளிப்படும் என அவர் வலியுறுத்தினார். தேவையெனில் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துவேன் என்றும் கூறினார்.
சசிகாந்த் செந்தில், 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். பல்லாரி, ஷிவமொக்கா, சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா மாவட்டங்களில் கலெக்டராகவும், கனிமவள துறை இயக்குநராகவும் பணியாற்றியவர். 2019ல் ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்து, 2020ல் காங்கிரசில் இணைந்தார். 2024 லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.