மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி அமைப்பில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக உள்ள வரி அமைப்பு எளிமைப்படுத்தப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படலாம். இந்த மாற்றம் சந்தையில் விலை குறைவையும் பொருளாதாரத்தில் பெரும் ஊக்கத்தையும் அளிக்கும்.

தற்போது 28% வரி பிரிவில் உள்ள கார், பைக், மொபைல் போன், கம்ப்யூட்டர், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் இனி 18% பிரிவுக்குள் வரும். இதனால் விலைகள் கணிசமாக குறையும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறைக்கு பெரும் வளர்ச்சி கிடைக்கும். மின்சார வாகனங்களுக்கு 5% வரி தொடர்வதால் பசுமை வாகன சந்தையும் ஊக்கமடையும்.
சிமென்ட், இரும்பு போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைய உள்ளதால் வீட்டு வசதி துறைக்கு மிகப்பெரும் நன்மை ஏற்படும். இதனால் வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த மாற்றம் நம்பிக்கையை அளிக்கும். கட்டுமானத் துறையில் முதலீடுகள் அதிகரித்து, புதிய திட்டங்கள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.
சுகாதார சேவைகள் மற்றும் காப்பீட்டு பிரிமியங்களுக்கு 18% இருந்த வரி 5% ஆகக் குறைய உள்ளது. இதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைந்து, பொதுமக்களுக்கு சுகாதார சேவைகள் எளிதாகக் கிடைக்கும். ஆயுள் காப்பீட்டு சந்தையும் விரிவடையும். அதேபோல், ஜவுளி மற்றும் நெய்துறை தயாரிப்புகளும் மலிவு விலையில் கிடைக்கும். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி திறன் அதிகரிக்கும்.
இந்திய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி மாற்றம் தீபாவளி பரிசாக அமையும் என்று ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார். விலை குறைவு மக்கள் வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாது, வர்த்தகத்துறைகளுக்கும் புதிய உயிரோட்டம் அளிக்கும். பொருளாதார நிபுணர்கள், இந்த மாற்றம் இந்திய சந்தையை மட்டும் அல்லாது வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் எனக் கூறுகின்றனர்.