மதுரை: த.வெ.க. மாநாட்டு திடலுக்கு விஜயின் பெற்றோர் வருகை தந்தனர்.
மதுரை பாரபத்தி த.வெ.க. மாநாட்டில் மேடை அருகே 40 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று கிரேன் பெல்ட் அறுந்து விழுந்ததால் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த நிலையில், விஜய் த.வெ.க. கொடியை ஏற்றுவதற்காக இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநாட்டு திடலுக்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா முன்கூட்டியே வரவழைக்கப்பட்டு கேரவேனுக்குள் தங்க வைக்கப்பட்டனர்.
வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் மயக்கமடைந்தால் டிரோன்கள் மூலம் மருத்துவ உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்காக அமைக்கப்பட்ட இடத்தில் ஆண்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். இதை பார்த்த தனியார் பாதுகாவலர்கள் வேறு கேலரிகளுக்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் கலைந்து போகாததால் பெண்கள் அமர இடம் இல்லாமல் சிரமப்பட்டனர்.
கேலரிகளிலும் அமைக்கப்பட்ட ஒரு சில குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என தவெகவினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன.