புதுடில்லி: தென் அமெரிக்காவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. தென் அமெரிக்காவுக்கும் அண்டார்டிகாவுக்கும் இடையே உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. பூமியின் அடியில் சுமார் 10.8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் இந்த நிலநடுக்கம் 8 ரிக்டர் அளவாக மதிப்பிடப்பட்டது. பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதை 7.5 ரிக்டர் அளவாக திருத்தி அறிவித்துள்ளது. தற்போது உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
ரிக்டர் அளவுகோலில் 7க்கு மேற்பட்ட நிலநடுக்கங்கள் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த மாதம் ரஷ்யா மற்றும் ஜப்பான் அருகே 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை கவனித்து வருகின்றன. நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் புவியியல் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இத்தகைய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மனித வாழ்வுக்கும், கட்டிடங்களுக்கும், கடலோரப் பகுதிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.